கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பின் சாதியும் ஜனநாயக அரசியலும் குறித்த ஓர் ஆய்வு - பகுதி 2 | இலங்கையின் அரசியல் 1900 - 1981 : பன்முகநோக்கு | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்
Description
‘இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘ என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்று கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.